கொசோவோ : போராட்டமும் - விடுதலையும்


யூகோஸ்லாவியா கூட்டாட்சிக் குடியரசின் ஒரு அங்கமாக இருந்த கொசோவோவிற்கு யூகோஸ்லாவிய அதிபராக இருந்த டிட்டோ 1974 ஆம் ஆண்டு சுயாட்சி அளித்தார்.இன்றைய செர்பியாவின் வட பகுதியில் இருந்த வோஜ்வோடினாவிற்கும், தெற்கில் கொசோவோவிற்கும் மார்ஷல் டிட்டோ சுயாட்சியளித்து யூகோஸ்லாவியா கூட்டாட்சிக் குடியரசை வலிமைபடுத்தினார்.ஆனால் டிட்டோவின் மறைவிற்குப் பிறகு, அதிபராக வந்த சுலோபோடான் மிலாசவிச், தனது அரசியல் செல்வாக்கை நிலைபடுத்திக் கொள்ள செர்பிய மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டார். கொசோவோ அல்பானியர்களுக்கு எதிராக வெறுப்புணர்ச்சியைத் தூண்டி, செர்பிய தேசியவாதத்தை வளர்த்து தனது அரசியல் செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ள மிலாசவிச் மேற்கொண்ட நடவடிக்கைகளே கொசோவோ விடுதலை போராட்டத்திற்கு வித்திட்டது.1989 ஆம் ஆண்டில் ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்து கொசோவோவிற்கு அளிக்கப்பட்டிருந்த சுய ஆட்சி அதிகாரத்தை மிலாசவிச் ரத்து செய்தார். அதுமட்டுமின்றி, கொசோவோ அல்பானியர்களை, அரசுப் பணிகளில் இருந்தும், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அமைப்புக்களிலிருந்தும் அகற்றி இன ஒழித்தல் நடவடிக்கையை வெளிப்படையாக செயல்படுத்தினார்.
webdunia photo
FILEடாக்டர் இப்ராஹிம் ருகோவா என்பவரின் தலைமையில் செர்பிய ஒடுக்குமுறையை எதிர்த்த கொசோவோ அல்பானியர்கள், தங்கள் பகுதியில் ஒரு நிழல் அரசை நிறுவினர். வன்முறை தவிர்த்து அமைதி வழியில் போராட்டத்தை துவக்கிய அல்பானியர்கள் தங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டுமென கோரினர். ஆனால் அக்கோரிக்கையை மிலாசவிச் நிராகரித்தார்.செர்பிய ஒடுக்கலை எதிர்த்து 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டம் கடுமையாக ஒடுக்கப்பட்டதையடுத்து கொசோவோவிலிருந்து 2 லட்சம் அல்பானியர்கள் வெளியேறினர்.செர்பிய பெரும்பான்மை மேலாதிக்க அரசால் கடுமையான இன ஒடுக்கலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையிலும், இப்ராஹிம் ருகோவா தலைமையிலான மக்கள் போராட்டம் அமைதி வழியிலேயே தங்கள் உரிமைகளை மீட்கப் போராடியது. இந்த நிலையில் 1991 ஆம் ஆண்டு மற்றொரு பிரகடனத்தின் முலம் கொசோவோவின் நாடாளுமன்றத்தை அதிபர் மிலாசவிச் நீக்கினார்.இதைக் கண்டு அயராத கொசோவோ மக்கள் தேர்தலை நடத்தி இப்ராஹிம் ருகோவாவை அதிபராக்கினர். 130 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்தையும் அமைத்தனர். இதனையடுத்து கொசோவோ அல்பானியர்களை கடுமையாக ஒடுக்கத் துவங்கினார் மிலாசவிச். அதுவரை அமைதி வழியில் போராடிய கொசோவோ மக்கள் ஆயுதமெடுத்தனர். கொசோவோ விடுதலை ராணுவம் அமைக்கப்பட்டது. அந்நிய நாட்டிற்குள் புகும் ஆக்கிரமிப்புப் படையைப் போல செர்பிய ராணுவமும், மற்ற ஆயுதப்படைகளும் கொசோவோவிற்குள் புகுந்து தாக்கின. பல்லாயிரக்கக்கான அல்பானியர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில்தான், 1998 ஆன் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி, ஐ.நா. பாதுகாப்பு பேரவை, அமைதியாகப் போராடிய கொசோவோ மக்கள் மீது மிக அதிகப்படியான அடக்குமுறையை செர்பிய காவல்துறை கட்டவிழ்த்து விட்டதென்று கூறி கண்டனம் செய்தது மட்டுமின்றி, யூகோஸ்லாவியாவிற்கு எதிராக ஆயுதத் தடையும் விதித்து தீர்மானம் (எண் 1169) நிறைவேற்றியது. கொசோவோ மக்கள் மீது செர்பியா கட்டவிழுத்துவிட்ட வன்முறை ஐ.நா.வின் 7 வது விதிமுறைகளின் படி, சர்வதேச அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியது என்றும் பாதுகாப்புப் பேரவை தனது தீர்மானத்தில் கூறியது.இதற்குப் பிறகும் அல்பானியர்களுக்கு எதிரான இன ஒடுக்கல் குறையவில்லை, மாறாக அதிகரித்தது. கொசோவோ மக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றும் திட்டத்துடன் தனது இன ஒடுக்கலை தொடர்ந்தது யூகோஸ்லாவிய அரசு. செர்பியாவின் எல்லைப் பகுதிகளை ஒட்டியுள்ள அல்பானியர்களை வன்முறையை ஏவி விரட்டியடித்தது. சொந்த நாட்டு மக்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையால் 3 லட்சம் அல்பானியர்கள் மலைப்பகுதிகளுக்கும், காடுகளுக்கும் விரட்டப்பட்டனர்.இந்த நிலையில்தான் செர்பிய அரசின் ஒடுக்குமுறையில் இருந்து கொசோவோ மக்களைக் காக்க 1998 செப்டம்பரில் நேட்டோ படைகள் அந்நாட்டிற்குள் நுழைந்து செர்பிய படைகளை வெளியேற்றின.கொசோவோவில் அமைதி நிலைநாட்டப்பட்டது. 1999 ஆம் ஆண்டு முதல் ஐ.நா.வின் அதிகாரத்திற்குட்பட்ட இடைக்கால நிர்வாக அரசு ஏற்படுத்தப்பட்டது.
தன்னாட்சி உரிமை கோரி செர்பிய அரசுடன் கொசோவோ அரசியல் இயக்கங்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காத்தையடுத்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் நாட்டின் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி சுதந்திர பிரகடனம் செய்தது கொசோவோ.

1 comment:

Anonymous said...

நல்ல வரலாற்று பதிவு