கோடிக்கரையில்
கடலில் அடித்த சுழிக்காற்றுச் சோழ நாட்டுக் கடற்கரையோரத்தில் புகுந்து, தன் துரிதப் பிரயாணத்தைச் செய்து கொண்டு போயிற்று. "கல்லுளிமங்கன் போன வழி, காடு மலையெல்லாம் தவிடுபொடி" என்பது போல, அந்தச் சுழிக்காற்றுப் போன வழியெங்கும் பற்பல பயங்கர நாசவேலைகளைக் காணும்படி இருந்தது. கோடிக்கரையிலிருந்து காவேரிப் பூம்பட்டினம் வரையில் சோழநாட்டுக் கடற்கரையோரங்களில் வாயு பகவானின் லீலை செய்த வேலைகளை நன்கு பார்க்கும் படியிருந்தது. எத்தனையோ மரங்கள் வேரோடு பெயர்ந்தும், கிளைகள் முறிந்தும் கிடந்தன. வீடுகளின் கூரைகளைச் சுழிக் காற்று அப்படியே தூக்கி எடுத்துக்கொண்டு போய்த் தூர தூரங்களில் தூள் தூளாக்கி எறிந்து விட்டிருந்தது. குடிசைகள் குட்டிச் சுவர்களாயிருந்தன. கோடிக் கரைப்பகுதியில் எங்கே பார்த்தாலும் வெள்ளக் காடாயிருந்தது. கடல் பொங்கி வந்து பூமிக்குள் புகுந்து விட்டதோ என்று தோன்றியது. ஆனால் பூமிக்கும் கடலுக்கும் மத்தியில் இருந்த வெண்மணல் பிரதேசம் அந்தக் கொள்கையைப் பொய்ப்படுத்தியது. அந்த வெண்மணல் பிரதேசத்தில் ஆங்காங்குப் புதைசேறு இருந்த இடங்களில் மட்டும் இப்போது அதிகமாகத் தண்ணீர் தேங்கியிருந்தது. அப்படிப்பட்ட இடங்களில் இப்போது மனிதனோ மிருகமோ இறங்கி விட்டால், உயிரோடு சமாதிதான்! யானைகளைக் கூட அப்புதை சேற்றுக் குழிகள் இப்போது விழுங்கி ஏப்பம் விட்டு விடும்!
சுழிக்காற்று அடித்த இரண்டு நாளைக்குப் பிறகு கோடிக்கரைக்குப் பெரிய பழுவேட்டரையரும் அவருடைய பரிவாரங்களும் வந்து சேர்ந்தார்கள். பல்லக்கும் பின்தொடர்ந்து வந்தது. ஆனால் இம்முறை அந்தப் பல்லக்கில் அமர்ந்து இளையராணி நந்தினிதேவியே பிரயாணம் செய்தாள். "மதுராந்தகத் தேவரை அந்தரங்கமாக அழைத்துப்போக வேண்டிய அவசியம் இப்போது இல்லை.மேலும் சில சமயம் இளைய ராணியையும் உடன் அழைத்துப் போனால்தானே மறுபடி அவசிய நேரும் போது மதுராந்தரகரை அழைத்துபோக அந்தப் பல்லக்கு வாகனம் உபயோகமாயிருக்கும்?" இவ்வாறு நந்தினி கூறியதைப் பழுவேட்டரையர் உற்சாகமாக ஒப்புக்கொண்டார். காமாந்தகாரத்தில் மூழ்கியிருந்த அக்கிழவருக்குத் தம்முடன் அந்தப் புவனசுந்தரியை அழைத்துப் போவதில் ஆர்வம் இருப்பது இயல்புதானே?
சுழிக்காற்றுக்கு முன்னால் அவர்கள் நாகைப்பட்டினத்துக்கு வந்திருந்தார்கள். அங்கே தனாதிகாரி தமது உத்தியோகக் கடமைகளை முதலில் நிறைவேற்றினார்.
நாகைப்பட்டினம் அப்போது தமிழகத்தின் முக்கியத் துறைமுகப்பட்டினங்களில் ஒன்றாயிருந்தது. வௌிநாடுகளிலிருந்து எத்தனை எத்தனையோ பொருள்கள் பெரிய பெரிய மரக்கலங்களில் வந்து அத்துறைமுகத்தில் இறங்கிக் கொண்டிருந்தன. அப்பொருள்களை ஆயிரக்கணக்கான சிறிய படகுகள் ஏற்றிக் கொண்டு வந்து கரையில் சேர்த்தன. கரையிலிருந்து மாற்றுப் பண்டங்களை ஏற்றிக்கொண்டு போய் மரக்கலங்களில் சேர்த்தன. இவற்றுக்கெல்லாம் சுங்க திறை விதித்து வசூலிக்கும் அதிகாரிகள் பலர் இருந்தனர். அவர்கள் சரிவர வேலை செய்கிறார்களா என்பதை மேற்பார்வை பார்ப்பது சோழ நாட்டுத் தனாதிகாரி பெரிய பழுவேட்டரையரின் உரிமையும், கடமையும் அல்லவா?
அந்த வேலை பூர்த்தியான பிறகு பெரிய பழுவேட்டரையர் நாகைப்பட்டினத்தில் புகழ் பெற்றிருந்த சூடாமணி புத்த விஹாரத்துக்கும் விஜயம் செய்தார். பிக்ஷூக்கள் அவரைத் தக்கபடி வரவேற்று உபசரித்தனர். புத்தவிஹாரத்துக்குத் தேவை ஏதேனும் உண்டா, பிக்ஷூகளுக்குக் குறைகள் ஏதேனும் உண்டா என்று தனாதிகாரி விசாரித்தார். ஒன்றும் இல்லையென்று பிக்ஷூக்கள் கூறி, சுந்தர சோழ மன்னருக்குத் தங்கள் நன்றியையும் தெரிவித்தார்கள்.
சில நாளைக்கு முன் இந்த விஹாரத்தைச் சேர்ந்த பிக்ஷூக்கள் இருவர் தஞ்சைக்குச் சக்கரவர்த்தியைப் பார்க்க வந்திருந்தார்கள். புத்தசங்கத்தின் சார்பாகச் சுந்தரசோழர் விரைவில் நோய் நீங்கிக் குணம் அடையவேண்டும் என்ற வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.அப்போது அவர்கள் இளவரசர் அருள்மொழிவர்மர் இலங்கையில் புத்த தர்மத்துக்குச் செய்துவரும் தொண்டுகளைக் குறித்துத் தங்கள் பாராட்டுதலைத் தெரிவித்தார்கள். இடிந்து போன புத்த விஹாரங்களைப் புதுப்பித்துக் கொடுக்கும்படியாக இளவரசர் கட்டளையிட்டு நிறைவேற்றியும் வருவது இலங்கையில் உள்ள புத்த பிக்ஷூக்களின் மகா சங்கத்துக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளித்து வருவதாகவும் அவர்கள் கூறினார்கள்.
"சக்கரவர்த்திப் பெருமானே! இன்னும் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியும் நாங்கள் கேள்விப்படுகிறோம். இலங்கையின் பழமையான சிம்மாசனத்தைத் தங்களுடைய இளைய திருக்குமாரருக்கே அளித்து இலங்கை அரசராக முடி சூட்டி விடலாம் என்று பிக்ஷூக்களில் ஒரு பெரும் பகுதியார் கருதுகிறார்களாம்! அவ்விதம் தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கிறார்களாம்! இதைக் காட்டிலும் நம் இளவரசரின் பெருமைக்கு வேறு என்ன சான்று வேண்டும்!" என்றார்கள்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த பெரிய பழுவேட்டரையரின் உள்ளத்தில் ஓர் அபூர்வமான யோசனை உதயமாயிற்று. பிக்ஷூக்கள் சென்ற பிறகு அதைச் சுந்தர சோழச் சக்கரவர்த்தியிடமும் தெரிவித்தார். "மூன்று உலகும் ஆளும் இறைவா! தங்கள் அதிகாரம் எட்டுத்திசையிலும் பரவி நிலைபெற்றிருக்கிறது. இந்தப் பரந்த பூமண்டத்தில் தங்கள் ஆணைக்குக் கீழ்ப்படியாதவர்கள் யாரும் இல்லை. ஆனால் தங்கள் திருப்புதல்வர்கள் இருவர் மட்டும் இதற்கு விலக்காயிருக்கின்றனர். அவர்களுக்குத் துர்ப்புத்தி புகட்டும் சிலர் சோழ மகாராஜ்யத்தில் பெரிய பதவிகள் வகிக்கிறார்கள். ஆதித்த கரிகாலர் தங்கள் விருப்பத்தின்படி இங்கு வருவதற்கு மறுத்து தங்களைக் காஞ்சிக்கு வரும்படி ஓலை அனுப்புகிறார். அவருக்கு இவ்வாறு துர்புத்தி புகட்டுகிறவர் வேறு யாரும் இல்லை; தங்கள் மாமனாரான திருக்கோவலூர் மலையமான்தான். அவ்வாறே ஈழ நாட்டிலிருந்து தங்கள் இளம் புதல்வரைத் தருவிக்கும் படியாகத் தாங்கள் பன்முறை சொல்லிவிட்டீர்கள். நானும் ஆள் அனுப்பி அலுத்து விட்டேன். நமது ஆட்கள் இளவரசரைச் சந்திக்காத படியும் நம் ஓலை இளவரசரைச் சேராதபடியும் அந்தக் கொடும்பாளூர்ப் பெரிய வேளான் செய்துகொண்டு வருகிறான். இல்லாவிடில், தங்கள் அருமைப் புதல்வர் தங்கள் விருப்பந் தெரிந்த பிறகும் இத்தனைகாலம் வராமல் தாமதிப்பாரா? இந்நிலைமையில் எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. தாங்கள் கட்டளையிட்டால் அதைத் தெரிவிக்கிறேன்" என்றார் பழுவேட்டரையர்.
சக்கரவர்த்தி சம்மதம் கொடுத்ததின்பேரில் தனாதிகாரி தெரிவித்தார். "இலங்கைச் சிம்மாதனத்தைக் கவர்ந்து முடி சூட்டிக்கொள்ளச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டி இளவரசரைச் சிறைப்படுத்திக் கொண்டு வரும்படி கட்டளை பிறப்பித்து அனுப்புவோம். அத்தகைய கட்டளையைப் பூதி விக்கிரமகேசரி தடை செய்ய முடியாது. அன்றியும், இளவரசரிடம் நேரில் எப்படியேனும் கட்டளையைச் சேர்ப்பிக்கச் செய்துவிட்டால் இளவரசர் கட்டாயம் வந்தே தீருவார்!"
இதைக் கேட்ட சுந்தர சோழர் புன்னகை புரிந்தார். விசித்திரமான யோசனைதான்; ஆயினும் ஏன் கையாண்டு பார்க்கக் கூடாது? பொன்னியின் செல்வனைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் சக்கரவர்த்தியின் மனதில் பொங்கிக் கொண்டிருந்தது. தம்முடைய அந்திம காலம் நெருங்கிக் கொண்டிருப்பதாக அவர் உணர்ந்தார். ஆகையால் தம் அந்தரங்க அன்புக்குரிய இளங்கோவிடம் இராஜ்யத்தைப் பற்றித் தம் மனோரதத்தை வௌியிட விரும்பினார். மதுராந்தகனுக்கே தஞ்சாவூர் இராஜ்யத்தை அளிக்க வேண்டும் என்ற தம் விருப்பத்தை அறிந்தால் அருள்மொழிவர்மன் மறுவார்த்தையே பேசாமல் அதை ஒப்புக்கொள்வான். பின்னர் அவன் மூலமாக ஆதித்த கரிகாலனுடைய மனத்தை மாற்றுவதும் எளிதாயிருக்கும்.
இவ்வாறு சிந்தித்துத் தனாதிகாரியின் யோசனையைச் சக்கரவர்த்தி ஆமோதித்தார். அதன் பேரில்தான் அருள்மொழிவர்மரைச் சிறைப்படுத்தி வரும்படி கட்டளை அனுப்பப்பட்டது. இளவரசருக்கு எவ்விதத் தீங்கும் ஏற்படக்கூடாது என்ற கண்டிப்பான கட்டளையும் மரக்கலத் தலைவனுக்குப் பிறப்பிக்கப்பட்டது.
மேற்கூறிய கட்டளையுடன் இருமரக்கலங்கள் ஈழநாட்டுச் சென்ற பிறகு, பெரிய பழுவேட்டரையர் சிறிது மனக்கவலை கொண்டார். இளவரசருக்கு ஏதேனும் நேர்ந்தது விட்டால் தனக்கு பெரும் பழி ஏற்படும் என்பதை உணர்ந்தார். ஆகையால் தாமே நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு நேரே சென்றிருந்து, இளவரசரைத் தக்கபடி வரவேற்றுத் தமது சொந்தப் பொறுப்பில் அவரைத் தஞ்சாவூருக்கு அழைத்துக் கொண்டு வர விரும்பினார்.
இந்த யோசனைக்கு இன்னும் சில உபகாரணங்களும் இருந்தன. இளவரசர் தஞ்சைக்கு வந்து சக்கரவர்த்தியைப் பார்ப்பதற்கு முன்னால் செம்பியன்மாதேவியோ, குந்தவையோ அவரைப் பார்க்கும்படி விடக்கூடாது. அந்தப் பெண்கள் இருவரும் இளவரசர் மீது மிக்க செல்வாக்கு உள்ளவர்கள்; பழுவேட்டரையரை வெறுப்பவர்கள். ஆகையால் இளவரசரிடம் ஏதாவது சொல்லி அவர் மனத்தைக் கெடுத்து விடுவார்கள். தக்க சமயம் வருவதற்குள், அதாவது சுந்தரசோழர் மரணம் அடைவதற்குள், ஏடாகூடமாக ஏதேனும் நடந்து, காரியங்கள் கெட்டுப் போகலாம்.
அன்றியும், பொக்கிஷ நிலவறையில் சுரங்க வழிக்காவலன் பின்னாலிருந்து தாக்கி வீழத்தப்பட்டதிலிருந்து தனாதிகாரியின் மனத்தில் ஏதேதோ விபரீத சந்தேகங்கள் உதித்திருந்தன. பொக்கிஷ சாலையில் யாராவது ஒளிந்திருக்கக்கூடுமா? அப்படியானால் அது யாராயிருக்கும்? தஞ்சைக் கோட்டைக் காவலர்களிடம் அகப்படாமல் தப்பிச் சென்ற வாணர்குல வீரனாயிருக்குமா? அங்ஙனமானால் அவன் இன்னும் பல இரகசியங்களை அறிந்திருக்கக்கூடும் அல்லவா?
சின்னப் பழுவேட்டரையர் கூறுகிறபடி நந்தினியைப் பார்க்க அடிக்கடி வரும் மந்திரவாதிக்கு இதில் ஏதேனும் சம்பந்தம் இருக்குமா? அதையும் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். இளைய பிராட்டி குந்தவை தேவிதான் வந்தியதேவனை ஓலையுடன் இளவரசர் அருள்மொழிவர்மரிடம் அனுப்பியிருக்கிறாள் என்னும் செய்தியும் தனாதிகாரியின் மனத்தைக் கலங்கச் செய்திருந்தது. வந்தியத்தேவன் மூலம் என்ன செய்தி அனுப்பியிருப்பாள்? தாமும் சம்புவரையர் முதலியவர்களும் சோழ சிம்மாசனத்தைப் பற்றி முடிவு செய்துள்ள யோசனையைப் பற்றி அந்தப் பெண் பாம்புக்குச் செய்தி எட்டியிருக்குமோ? அதைப்பற்றி ஏதேனும் அவள் எழுதி அனுப்பியிருப்பாளோ?
எப்படியிருந்த போதிலும் இளவரசர் சோழநாட்டின் கரையில் இறங்கியதும், தாம் அவரை முதலில் சந்திப்பதுதான் நல்லது. வந்தியதேவனையும் இளவரசருடன் சிறைபடுத்திக் கொண்டுவரக் கட்டளையிட்டிருப்பதால் அவனையும் முதலில் தாம் பார்த்தாக வேண்டும். அவனுக்கு என்னென்ன தெரியும், எவ்வளவு தூரம் தெரியும் என்பதையும் கண்டு பிடித்தாக வேண்டும்.
இப்படியெல்லாம் யோசித்துப் பெரிய பழுவேட்டரையர் நாகைப்பட்டினத்துக்குப் போய்க் காத்திருக்கத் தீர்மானித்தார். அவருக்கு இருந்த காரணங்களைக் காட்டிலும் அதிகமாகவே நந்தினிதேவிக்கு இருந்தன. வந்தியத்தேவனை மறுபடி பார்க்கவும் குந்தவை அவனிடம் என்ன ஓலை கொடுத்து அனுப்பினாள் என்பதை அறிந்து கொள்ளவும் நந்தினி மிக்க ஆவலாயிருந்தாள். மந்திரவாதி ரவிதாஸன் போன காரியம் எவ்வளவு தூரம் வெற்றியடைந்தது என்று அறியவும் ஆர்வம் கொண்டிருந்தாள். ஆகையால் நாகைப்பட்டினத்துக்குத் தானும் வருவதாகக் கூறினாள். கரும்பு தின்னக் கூலி வேண்டுமா? கிழவர் உடனே அதற்கு இசைந்தார். கடலில் கரையோரமாக உல்லாசப் படகில் ஏறி நந்தினியுடன் ஆனந்தப் பிரயாணம் செய்வது பற்றி அவர் மனோராஜ்யம் செய்யலானார். அவர் உள்ளத்தையும் உடலையும் எரித்துக் கொண்டிருந்த தாபம் அதன்மூலம் தீர்வதற்கு வழி ஏற்படலாம் என்றும் ஆசை கொண்டார்.
பழுவேட்டரையரும், நந்தினியும் நாகைப்பட்டினத்திலிருந்தபோதுதான் சுழற் காற்று அடித்தது. காற்றின் உக்கிர லீலைகளை நந்தினி வெகுவாக அநுபவித்தாள். கடற்கரையோரத்தில் தென்னை மர உயரத்துக்கு அலைகள் எழும்பி விழுவதைப் பார்த்துக் களித்தாள். ஆனால் கடலில் உல்லாசப் படகில் ஆனந்த யாத்திரை செய்யலாம் என்னும் பழுவேட்டரையரின் மனோராஜ்யம் நிறைவேறவில்லை.
சுழிக்காற்று அல்லோலகல்லோலப்படுதி விட்டுப்போன பிறகு, கடலிலே கப்பல்களுக்கும் படகுகளுக்கும் சேதம் உண்டா என்பதைப் பற்றிப் பழுவேட்டரையர் விசாரித்து அறிந்தார். கரையோரத்தில் அனைவரும் சுழிக்காற்று வரப்போவதை அறிந்து ஜாக்கிரதையாயிருந்த படியால் அதிகச்சேதம் ஏற்படவில்லையென்று தெரிந்தது. ஆனால் நடுக்கடலில், ஈழத்துக்கும் கோடிக்கரைக்கும் நடுவில், இரு கப்பல்கள் தத்தளித்ததாகவும், அவற்றில் ஒன்று தீப்பற்றி எரிந்து முழுகியதாகவும் கட்டு மரங்களில் மீன் பிடிக்கச் சென்றிருந்த வலைஞர்கள் சிலர் கூறினார்கள். இது பழுவேட்டரையருக்கு மிக்க கவலையை உண்டாக்கிற்று. அந்த இரண்டு மரக்கலங்களும் இளவரசரைச் சிறைப்பிடித்து வந்த கப்பல்களாயிருக்கலாம் அல்லவா? அப்படியானால் இளவரசரின் கதி யாதாகியிருக்குமோ? இளவரசருக்கு ஏதேனும் நேர்ந்திருந்தால் தனக்குப் பெரும் பழி ஏற்படுமே? சோழ நாட்டு மக்களின் எல்லையற்ற அன்பைக் கவர்ந்தவராயிற்றே, அருள்மொழிவர்மர். மக்களுக்கு அவரைப் பற்றி என்ன சொல்வது? சக்கரவர்த்திக்குத்தான் என்ன சமாதானத்தைக் சொல்வது? - நிச்சயமான செய்தி தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் பேராவல் அவருக்கு உண்டாயிற்று. கோடிக்கரைக்குப் போனால் ஒருவேளை விவரம் தெரியலாம்.மூழ்கிய கப்பலை நன்றாய்ப் பார்த்தவர்கள் அங்கே இருக்கக்கூடும். மூழ்கிய கப்பலிலிருந்து தப்பியவர்கள் யாரேனும் கரை சேர்ந்திருக்கவும் கூடும். ஆம்; உடனே கோடிக்கரைக்குப் போக வேண்டியதுதான்!
இந்த எண்ணத்தை நந்தினியிடம் வௌியிட்டதும் அவள் ஆர்வத்துடன் அதை ஒப்புக்கொண்டாள். "கோடிக்கரையை நான் இதுவரையில் பார்த்ததில்லை. அந்தப் பிரதேசம் மிக அழகாயிருக்கும் என்று கேளிவிப்பட்டிருக்கிறேன். இச்சந்தர்ப்பத்தில் அதையும் பார்த்துவிடலாம்" என்றாள் நந்தினி.
நாகைப்பட்டினத்திலிருந்து கோடிக்கரைக்கு இரண்டு வழிகள் உண்டு. கடற்கரையோரமாகச் சென்ற கால்வாய் வழியாகப் படகில் ஏறிப் போகலாம். அல்லது சாலை வழியாகவும் போகலாம். பழுவேட்டரையரின் பரிவாரங்கள் அதிகமாயிருந்தபடியால் சாலை வழியாகவே போனார்கள். மேலும் நந்தினி கால்வாய் வழியை விரும்பவும் இல்லை. கால்வாயில் படகில் போனால் பழுவேட்டரையர் தம் காதல் புராணத்தைத் தொடங்கிவிடுவார் என்று நந்தினி அஞ்சியது ஒரு காரணம். அது மட்டும் அன்று, சாலை வழியாகச் சென்றால் கடற்கரையோரத்தில் வந்து ஒதுங்கும் கட்டுமரக்காரர்களையும் படகோட்டிகளையும் விசாரித்துக்கொண்டு போகலாம் அல்லவா?
வழியில் அப்படி விசாரித்ததில் புதிய செய்தி ஒன்றும் தெரியவில்லை. நடுக்கடலில் சுழிக்காற்றுப் பலமாக அடித்த சமயம் கப்பல் ஒன்று தீப்பட்டு எரிந்ததைப் பார்த்ததாக மட்டும் இன்னும் சிலரும் கூறினார்கள். கோடிக்கரையை அடைந்ததும் கலங்கரை விளக்கத்தின் காவலர் தியாக விடங்கர் தமது எளிய வீட்டைப் பழுவேட்டரையர் தம்பதிகளுக்காக ஒழித்துக் கொடுப்பதாகச் சொன்னார். அதை ஏற்கும்படி மன்றாடிக் கேட்டுக்கொண்டார். கோடிக்கரையில் தங்குவதற்கு வேறு மாட மாளிகை கிடையாது. எனினும் நந்தினி அதை மறுத்துவிட்டாள். கலங்கரை விளக்கிற்கு அருகில் கூடாரம் போட்டுக்கொண்டு தங்க விரும்புவதாகக் கூறினாள்.
அவ்வாறே கூடாரங்கள் அடிக்கப்பட்டன. சற்றுத் தூரத்தில் ஆங்காங்கு பழுவூர்ப் பரிவாரங்களுக்கும் கூடாரங்கள் போடப்பட்டன. கூடாரங்கள் அடித்து முடித்தவுடனே கடலில் ஒரு பெரிய மரக்கலம் காணப்பட்டது. அது கரையோரமாக எவ்வளவு தூரம் வரலாமோ அவ்வளவு தூரத்தில் வந்து நின்றது.
அதைக் கண்டதும், பழுவேட்டரையரின் பரபரப்பு மிகுந்தது. கப்பலின் பாய்மரங்கள் சின்னாப்பின்னமாகியிருந்ததிலிருந்து அது சுழிக்காற்றில் அகப்பட்டிருக்க வேண்டுமென்று தௌிவாயிற்று. அதில் இருப்பவர்கள் யார்? ஒரு வேளை இளவரசராயிருக்கலாமோ? புலிக்கொடி காணப்படாததில் வியப்பில்லை. சுழிக்காற்றில் அது பிய்த்து எறியப்பட்டிருக்கலாம் அல்லவா?
கப்பலண்டை போய்த் தகவல் தெரிந்து கொண்டு வருவதற்காகப் பழுவேட்டரையர் அங்கிருந்து ஒரு படகை அனுப்பி வைத்தார். கப்பலிலிருந்தவர்கள் படகுக்காகக் காத்திருந்ததாகத் தோன்றியது. உடனே இருவர் கப்பலிலிருந்து படகில் இறங்கினார்கள். அவர்களில் ஒருவன் பார்த்திபேந்திர பல்லவன்.
வந்தியத்தேவனைக் காப்பாற்றுவதற்காக மரக்கலத்திலிருந்து படகில் இறங்கிச் சென்ற இளவரசர் அருள்மொழிவர்மர் திரும்பக் கப்பலுக்கு வரவேயில்லை அல்லவா? இதனால் பார்த்திபேந்திரன் எல்லையற்ற கவலைக்கு உள்ளாகித் தத்தளித்தான். காற்று அடங்கிப் பொழுந்து விடிந்தபிறகு அங்குமிங்கும் கப்பலைச் செலுத்தித் தேடினான். படகில் இளவரசருடன் இறங்கியவர்களில் ஒருவன் மட்டும் குற்றுயிராக அகப்பட்டான். அவன் வந்தியத்தேவனை இளவரசர் மிக்க தீரத்துடன் காப்பாற்றிய பிறகு படகுக்கு நேர்ந்த கதியைச் சொன்னான். இதனால் பார்த்திபேந்திரனுடைய துயரம் பன்மடங்கு ஆயிற்று. ஒருவேளை கோடிக்கரை சென்று உயிருடன் ஒதுங்கியிருக்கக் கூடாதா என்ற ஆசை ஒரு பக்கத்தில் கிடந்து அடித்துக்கொண்டது.
ஆகவே கோடிக்கரை சென்று விசாரிப்பதென்று தீர்மானித்தான். அதற்காகவே கப்பலை அங்கே கொண்டுவந்து நிறுத்தச் செய்தான். படகில் இறங்கிய பிறகு கரையை நோக்கிப் போக ஆரம்பித்ததும் பெரிய பழுவேட்டரையர் தம் இளைய ராணி சகிதமாக அங்கு வந்திருப்பதை அறிந்துகொண்டான். இது அவனுக்கு மிக்க எரிச்சலை மூட்டியது.
பழுவூர் இளையராணி நந்தினியைப்பற்றி ஆதித்தகரிகாலர் கூறியவையும் நினைவுக்கு வந்தன. அவ்விதம் அந்த மகாவீரரின் உள்ளத்தைக் கொள்ளைகொண்டு அவரைப் பித்துப் பிடிக்க அடித்த மோகனாங்கி எப்படியிருப்பாள் என்று பார்க்கும் சபலமும் அவன் உள்ளத்தின் அடிவாரத்தில் ஒரு மூலையில் எழுந்தது. அந்த விருப்பம் விரைவில் வளர்நது கொழுந்துவிடத் தொடங்கியது. ஒருவேளை அவளைப் பார்க்க முடியாமற் போய் விடுமோ என்ற கவலையும் உண்டாகிவிட்டது.
ஆனால் அந்தக் கவலை நீடித்திருக்கவில்லை. படகிலிருந்து கரையில் இறங்கியதும் நேரே பழுவேட்டரையரின் கூடாரத்துக்குப் பார்த்திபேந்திரனை அழைத்துப் போனார்கள்.கூடாரத்தின் வாசலில் பழுவேட்டரையர் கம்பீரமான தோற்றத்துடன் நின்று கொண்டிருந்தார்.ஆஜானுபாகுவான அந்த வீராதி வீரரைக் 'கிழவர்' என்று சொல்லுவது எவ்வளவு பெரிய தவறு என்று பார்த்திபேந்திரன் எண்ணினான். அவன் பார்த்திருக்கும் எத்தனையோ இளம் பிராய வாலிபர்களைக் காட்டிலும் அவர் தேகக்கட்டும், மனோதிடமும் வாய்ந்த புருஷ சிங்கமாகக் காட்சி அளித்தார்.
இவ்விதம் அவன் எண்ணிக் கொண்டிருக்கும்போதே கூடாரத்துக்கு உள்ளேயிருந்து மங்கை ஒருத்தி வௌிவந்தாள். மேகங்களுக்குப் பின்னாலிருந்து மின்னல் தோன்றுவதுபோல அந்தப் பொன் வண்ணப் பூவை கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் திகழ்ந்தாள். நெடிது வளர்ந்து உரம்பெற்ற தேக்கு மரத்தின் பேரில் படர்ந்திருக்கும் அழகிய பூங்கொடியைப் போல் அவள் பழுவேட்டரையருக்கு முன்னால் வந்து நின்றாள். அந்தப் புவன மோகினியைக்கண்டு திகைத்து நின்ற பார்த்திபேந்திரன் பேரில் தனது வேல் விழிகளைச் செலுத்திய வண்ணமாக அவள், "நாதா! இந்த வீர புருஷர் யார்? இவரை நான் இதுவரையில் பார்த்ததில்லையே?" என்று சொன்னாள். பொற் கிண்ணத்திலிருந்து அருந்திய மதுபானத்தைப் போல் அவளுடைய கிளி மொழிகள் பார்த்திபேந்திரனைப் போதை கொள்ளச் செய்தன.

No comments:
Post a Comment