எதிர் அடுக்குகளில் ஈட்டி வடிவமாக அமைந்த இலைகளையும் வாசனையுள்ள கொத்தாக வெள்ளை நிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி இனமாகும். இது செடி வகைகளிலேயே சிறு மர வகையை சார்ந்தது எனலாம். தண்டு ஆரம்பத்தில் நாற்கோணமாகவும், வளர்ந்து முதிர்ந்ததும் உருண்டையாகவும் சாம்பல் நிறத்திலும் இருக்கும். இதன் காய்கள் ஏறக்குறைய மணத்தக்காளி பழ அளவு இருக்கும். இலை, பூ, விதை, வேர் மருத்துவக் குணம் உடையது. இலை பித்தத்தை அதிகமாக்கும்; சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்; வேர் நோயை நீக்கி உடலைப் பலப்படுத்தி உடல் சூட்டை அகற்றும்; விதை, சதை- நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் குணம் உடையது. தமிழகம் எங்கும் வளர்கின்றது.
வேறு பெயர்கள்:மருதாணி,
மயிலம்
ஜவணம்
அடிவானம்
கினா
ஐவரிணி
மநோராச்சமரியம்
கொண்டோனி
காஞ்சனம்
தோரசகத்தி
செம்பீகாகவனைக் கன்னி
செகப்பி
கசப்பி
அபிமனைமாலி
வன்னத்தி
சரணம்
நிறத்தான்.
வகைகள்: சீமை மருதோன்றி
ஆங்கிலத்தில்: Lawsoniq inermis; Linn (L.Alba, Lumk); Lythreceae.
மருத்துவக் குணங்கள் :
மருதோன்றி இலையை இரவு நேரத்தில் பறித்து அத்துடன் பச்சைப் பாக்கு கொஞ்சம் சேர்த்து அரைத்து படுக்கப் போகும் முன் கை, கால் விரல்களிலுள்ள நகங்களில் வைத்து காலையில் சுத்தம் செய்து வந்தால், நன்கு சிவப்பாக பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
மருதோன்றி இலை 10 கிராம், மிளகு, வெள்ளைப் பூண்டுப் பல் 1, மஞ்சள் 5 கிராம் சேர்த்து அரைத்துக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு பின்னர் 1 டம்ளர் பால் குடிக்க மேகநோயால் வருகின்ற உடல் நமைச்சல், அரிப்பு குணமாகும். (3 வாரம் தொடர்ந்து சாப்பிடவும். அது சமயம் புகை, புளி, காரம் நீக்க வேண்டும்.)
இலையை அரைத்து நகப் பாலிசுக்குப் பதிலாகப் போட நக இடுக்குகளில் உள்ள நுண்ணிய கிருமிகளை அழித்து, நகச்சுற்று வராமல் தடுக்கும்.
இலையை அரைத்து நீரில் கரைத்து வாய் கொப்பளிக்கச் சிறு காயம், சிராய்ப்பு, அடி, வாய்ப்புண் குணமாகும்.
கைப்பிடியளவு இலையை எடுத்து 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெய் போட்டு இலைகள் கருகும் வரை காய்ச்சி பின்னர் இறக்கி வடிகட்டி தலைக்குத் தேய்த்துவர முடி உதிர்வது நிற்கும். முடி விழுந்த இடத்தில் முடி முளைக்கும். இளநரை, பித்த நரை, பூனை முடி உள்ளவர்கள் தேய்த்து வர முடி கறுப்பு நிறமாக மாறும்.
இலையை அரைத்து 100 கிராம் அளவு எடுத்து 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயில் கலந்து சிறு தீயில் பதமாகப் பச்சை நிறம் மாறாமல் காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்து வர முடி நன்கு வளரும். மருதோன்றிப் பூவை தேவையான அளவு எடுத்து படுக்கை அறையில் வைத்து இருந்தால் நல்ல தூக்கம் வரும். இதன் வேர்ப்பட்டையை அரைத்துத் தொடர்ந்து கட்டிவர கால் ஆணி குணமாகும். வேர்ப்பட்டையால் இன்னொரு பயனும் உண்டு. இதன் பட்டையைப் பாலில் அரைத்துப் பற்றுப்போட வெண்மேகம் குணமாகும். மருதோன்றி இலையை 20 கிராம் எடுத்து அரைத்து 1 டம்ளர் பாலில் கலந்து காலையில் மட்டும் 3 நாளுக்குக் குடித்து வர வெள்ளை, பெரும்பாடு, அதிகமான சிறு நீர் போக்கு குணமாகும் (மூன்று நாட்களுக்கு பால் சோறு சாப்பிடவும்).
இலையை அரைத்துச் சொத்தை நகங்களுக்கு வைத்துக் கட்டி ஈரம் படாமல் 3 நாட்கள் வைத்திருந்து, மீண்டும் அதேபோல கட்டி வரச் சொத்தை நகம் விழுந்து புதியதாக நல்ல நகம் முளைக்கும்.
இலை, விதை சம அளவாக எடுத்து அரைத்து சிறு துணியில் அரை நெல்லிக்காயளவு முடிந்து கருவாயில் திணித்து வைக்க பெண்களுக்கு உண்டாகும் வெள்ளை, பெரும்பாடு 4 நாளில் குணமாகும். தினமும் புதியதாகச் செய்யவும்.
மருதோன்றியின் முற்றிய வேர்ப்பட்டையை ஒன்றிரண்டாக இடித்து 5 கிராம் எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு ஊறவைத்து 1 மணி நேரம் கழித்து 100 மில்லியளவுக்கு சுண்டக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை 50 மில்லியளவு குடித்து வர நகச்சொத்தை குணமாகும். தொடர்ந்து குடித்து வர காமாலை, கல்லடைப்பு, சதையடைப்பு, இரத்தப் போக்கு குணமாகும்.
மருதோன்றி இலையுடன் படிகாரம் சேர்த்து அரைத்துப் பூசி வர, கருந்தேமல், படைகள், நரம்பு இழுப்பு, கால் நோய் குணமாகும். 10 கிராம் இலையை எடுத்து பூண்டு ஒன்றும் மிளகு 5-ம் சேர்த்து அரைத்து 5 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு உப்பிலில்லாத பத்தியம் இருக்க மேக நோய்கள் குணமாகும். 10 கிராம் இலையை எடுத்து ஓர் இரவு நீராகாரத்தில் ஊறவைத்து மறுநாள் காலையில் இலையை நீக்கி 20 நாட்கள் வரை காலையில் குடித்து வர, மேகச் சொறி, படைகள் குணமாகும்.
மருதோன்றிப் பூவை, இரவு நேரங்களில் தலையணையின் கீழ் வைத்துப் படுக்க நித்திரை உண்டாகும். உடல் சூடு தணியும். இதன் இலைச் சாற்றை தாளகத்தை இழைத்து வெண்குட்டத்தின் மேல் பூசிவர நிறம் மாறும். மருதோன்றி இலைகளை அரைத்துப் பற்று போட்டால் தலைவலி நீங்கும். இதன் விதையிலுள்ள எண்ணெயை உடம்பின் மீது தடவி வர உடல் சூடு தணிந்து குளிர்ச்சியாகும்.
No comments:
Post a Comment