போட்டி வேண்டாம்

ரோஜா : ஓ....மல்லியக்கா

மல்லி : ஏண்டி, ரோஜா அக்கா

ரோஜா : மல்லியக்கா மல்லியக்கா எங்கடி போறே?
கொஞ்சம் சொல்லடியக்கா
எதுக்கு இப்படி குலுக்கி நடக்கிறே?

மல்லி : நான்-மணவறையைச் சிங்காரிச்சு
வாசனையை அள்ளித் தௌிச்சு
வாரவங்க எல்லோரையும்
மயக்கப் போறேன்
மணப்பொண்ணு கூந்தலிலே
மணக்கப் போறேன்

ரோஜா : நீ-மணப்பொண்ணு தலையில் மட்டும்
மணக்கப்போறே,
நான்-மாப்பிள்ளை கழுத்தச்சுத்தி
தொங்கப் போறேன்
நீ-வாசனையைக் கொடுத்துப்பிட்டு
வதங்கப் போறே,
நான் வாரவங்க கையில் எல்லாம்
குலுங்கப் போறேன்-அடி
தந்தனத்தான தந்தனத்தான
சரக்கிது தானா? - உன்
தரத்துக்கும் உடல் நெறத்துக்கும் நான்
கொறஞ்சு போனேனா?

மல்லி : கள்ளமில்லா மனசுக் கென்னை உவமை
சொல்வாங்க - பெரும்
கவிஞரெல்லாம் காவியத்தில் இடம்
கொடுப்பாங்க,
காத்தடிச்சா போதும் என்னைக்
காணத்துடிப்பாங்க - ஓன்னை
கண்டாக்கூட முள்ளெ நெனச்சு
முகஞ்சுளிப்பாங்க - அடி
தந்தனத்தான தந்தனத்தான
சரக்கிது தானா? - உன்
தரத்துக்கும் உள்ளகுணத்துக்கும் நான்
கொறஞ்சு போனேனா?

ரோஜா : நீ - மலருமுன்னே வந்து கடைக்கு
மலிஞ்சு போறவ!

மல்லி : நீ - உலருமுன்னே தொட்டாக்கூட
உதிர்ந்து போறவ!

ரோஜா : நீ - வளரும் போதே கொம்பைத்
தேடிப்புடிச்சவ!

மல்லி : அதுக்கு வகையில்லாமெ
தனிச்சு நின்னு!-அடி
தந்தனத்தான தந்தனத்தான
சரக்கிது தானா? - உன்
தரத்துக்கும் உள்ளகுணத்துக்கும் நான்
கொறஞ்சு போனேனா?

(தாமரை வருதல்)

தங்கச்சி தங்கச்சி
தாமரைத் தங்கச்சி
எங்களுக்குள்ளே எவதான் சிறந்தவ
எடுத்துச் சொல்லு தங்கச்சி?

தாமரை : மலருவதெல்லாம் உலருவதுண்டு
மறந்துட வேணாம் அக்கச்சி! அக்கச்சி! - சில
மனிதரைப் போல வம்புகள் பேசி
பிரிந்திட வேணாம் அக்கச்சி! அக்கச்சி!

தாமரை : உலகில் சிறந்தது என்ன?

மல்லி : அன்பு உள்ளவர் செய்திடும் தானம்

தாமரை : அந்த தானத்தில் சிறந்தது என்ன?

ரோஜா : நல்ல தன்மை வளர்க்கும் நிதானம்

தாமரை : அதிலும் சிறந்தது என்ன?

மல்லி : பல அஹிம்சா மூர்த்திகள்
ஆராய்ந்து சொன்ன உலக சமாதானம்!

தாமரை : அதை நாம் உணர்ந்து
நடக்க வேணும் எல்லோரும்-ஒன்றாய்
இருக்கவேணும்!-அப்போதுதான்
உலவும் சமாதானம்-எங்கும்
நிலவும் சமாதானம்!

மூவரும் : அதை நாம் உணர்ந்து
நடந்திடுவோம்
எல்லோரும் ஒன்றாய்
இருந்திடுவோம்!

No comments: