இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளிடையே 2வது டெஸ்ட் போட்டி

சிட்னி, ஜன. 5: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், இந்தியா முதல் இன்னிங்சில் 69 ரன் முன்னிலை பெற்றது. மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெஸ்ட் போட்டிகளில் தனது 38வது சதத்தை விளாசினார்.
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளிடையே 2வது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது. டாசில் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்சில் 463 ரன் குவித்து ஆட்டமிழந்தது. சைமண்ட்ஸ் அதிகபட்சமாக 167* ரன் எடுத்தார்.
முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 216 ரன் எடுத்தது. சச்சின் 9 ரன், கங்குலி 21 ரன்னுடன் நேற்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். சச்சின் கொஞ்சம் பொறுமையாக விளையாட, பார்மில் உள்ள கங்குலி அதிரடியாக பவுண்டரிகளை விளாசி அரைசதம் கடந்தார்.
இருவரும் 4வது விக்கெட்டுக்கு 108 ரன் சேர்த்தனர். கங்குலி 67 ரன் (78 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஹாக் பந்தில் ஹ§சேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
திடீர் சரிவு: அடுத்து சச்சினுடன் ஜோடி சேர்ந்த யுவராஜ் வெறும் 12 ரன் மட்டுமே எடுத்து லீ வேகப்பந்தில் எல்பிடபுள்யூ ஆகி வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி விக்கெட் கீப்பர் டோனி, கேப்டன் கும்ப்ளே இருவரும் தலா 2 ரன்னில் வெளியேற இந்திய அணி திடீர் சரிவை சந்தித்தது.
ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 293 ரன் எடுத்து தெம்பாக இருந்த இந்தியா, மேற்கொண்டு 52 ரன் சேர்த்து 4 முக்கியமான விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து, இந்திய அணியை விரைவில் சுருட்டி விடலாம் என்ற நம்பிக்கையுடன் ஆஸி. வீரர்கள் தாக்குதலைத் தொடர்ந்தனர்.
சச்சின் அபாரம்: அது வரை பொறுமையாக விளையாடிக் கொண்டிருந்த சச்சின், அதிரடி ஆட்டத்தில் இறங்கினார். மறுமுனையில் ஹர்பஜன் சிங் பொறுப்புடன் ஒத்துழைக்க, இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
அபாரமாக விளையாடி ஆஸி. பந்துவீச்சை சிதறடித்த சச்சின், டெஸ்ட் போட்டிகளில் தனது 38வது சதத்தைப் பூர்த்தி செய்தார். சச்சின் & ஹர்பஜன் ஜோடியைப் பிரிக்க முடியாமல் ஆஸி. வீரர்கள் திணறினர்.
சிறப்பாக விளையாடிய ஹர்பஜன் அரைசதம் அடித்தார். அவர் 63 ரன் (92 பந்து, 8 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார். சச்சின் & ஹர்பஜன் ஜோடி 8வது விக்கெட்டுக்கு 129 ரன் சேர்த்து புதிய சாதனை படைத்தது. அடுத்து வந்த ஆர்.பி.சிங் 13 ரன், இஷாந்த் ஷர்மா 23 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்தியா முதல் இன்னிங்சில் 532 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. சச்சின் 154 ரன் (243 பந்து, 14 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸி. பந்துவீச்சில் லீ 5, ஜான்சன், ஹாக் தலா 2, ஸ்டூவர்ட் கிளார்க் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்தியா முதல் இன்னிங்சில் 69 ரன் முன்னிலை பெற்றது. அடுத்து 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸி. அணி, 3ம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 13 ரன் எடுத்துள்ளது. ஜேக்கஸ் 8, ஹேடன் 5 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

No comments: