பொன்னியின் செல்வன்/மூன்றாம் அத்தியாயம்

சித்தப் பிரமை

வானத்தில் விண்மீன்கள் கண்ணைச் சிமிட்டிக் கொண்டிருந்தன. பிறைச் சந்திரன் நீலக் கடலில் மிதக்கும் வெள்ளி ஓடத்தைப் போலப் பவனி வந்து கொண்டிருந்தான். காற்றின் வேகம் அதிகமாயிருந்தது. கடல் குமுறியது; வெள்ளலைக் கைகளை நீட்டிக் கரையில் நின்றவர்களைத் தன்பால் இழுக்க முயன்றது.
"ஏன் நிற்கிறாய்? சீக்கிரம் சேற்றைக் கழுவிக் கொள்! வீட்டுக்கு உடனே போக வேண்டும். இல்லாவிட்டால் இன்று எனக்குச் சோறு கிடைக்காது. அண்ணி சோற்றுப் பானையைக் கவிழ்த்து விடுவாள்!" என்றாள் பூங்குழலி.
"இங்கே கடலின் ஆழம் அதிகமா?" என்று வந்தியத் தேவன் கேட்டான்.
"உன்னைப்போல் பயங்கொள்ளியை நான் பார்த்ததேயில்லை. இங்கே வெகுத்தூரத்துக்கு ஆழமே கிடையாது. அரைக்காத தூரம் கடலில் போனாலும் இடுப்பளவு தண்ணீர் தான் இருக்கும். ஆகையினாலே தான் ஒவ்வொரு நாள் இரவும் கலங்கரை விளக்கு எரிய வேண்டியிருக்கிறது!"
வந்தியத்தேவன் தயங்கித்தயங்கி தண்ணீரில் இறங்கினான். சேற்றைக் கழுவிக் கைகால்களைச் சுத்தம் செய்து கொண்டு கரை ஏறினான். சற்றுத் தூரத்தில் வைத்தியருடைய மகன் குதிரை மேலேறி வருவதைக் கண்டான்.வந்தியத்தேவனுடைய குதிரையும் பக்கத்தில் வந்தது. "ஐயையோ! குதிரை சேற்றில் இறங்கி விடப் போகிறதே!" என்றான் வந்தியத்தேவன்.
"இறங்காது; மனிதர்களைவிடக் குதிரைகளுக்கு விவேகம் அதிகம்!" என்றாள் பூங்குழலி.
"ஆனால் ஒரு குதிரையின் பேரில் மனிதன் இருக்கிறானே? அவள் என் குதிரையையும் பிடித்து இழுத்துக் கொண்டு வருகிறானே?"
"அது கொஞ்சம் அபாயந்தான்! ஓடிப்போய் எச்சரிக்கை செய்!" "நில்லு! நில்லு!" என்று கூச்சலிட்டுக் கொண்டே வந்தியத்தேவன் ஓடிப்போய்த் தடுத்து நிறுத்தினான்.
பூங்குழலியும் சற்று நேரத்துக்கெல்லாம் அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டாள். மூவரும் கலங்கரை விளக்கத்தை நோக்கி நடந்தார்கள். "நீ குதிரையில் ஏறிக்கொள்ளலாமே?" என்றாள் பூங்குழலி.
"இல்லை; உன்னுடன் நடந்தே வருகிறேன்."
பூங்குழலி குதிரையின் அருகில் சென்று அதன் முகத்தைத் தடவிக் கொடுத்தாள். அதனால் மகிழ்ச்சி அடைந்ததைப் போல் குதிரை உடம்பைச் சிலிர்த்துக் கொண்டு சற்று இலேசாகக் கனைத்தது. "உன்னை என் குதிரைக்குப் பிடித்துவிட்டது! இது மிக்க நல்லது."
"என்ன விதத்தில் நல்லது?"
"நான் இலங்கைக்குப் போகவேண்டும். இந்தக் குதிரையை உன்னிடம் ஒப்புவித்து விட்டுப் போகலாம் என்று எண்ணுகிறேன்.பார்த்துக் கொள்கிறாயா?"
"ஓ! பார்த்துக் கொள்கிறேன். எல்லா மிருகங்களும் என்னிடம் சீக்கிரம் சிநேகமாகிவிடும். மனிதர்களுக்கு மட்டுந்தான் என்னைக் கண்டால் பிடிக்காது."
"என் அப்படிச் சொல்கிறாய்? சேந்தன் அமுதன் உன்பேரில்..."
"எனக்கும் மிருகங்களின் பேரில்தான் பிரியம்; மனிதர்களைக் கண்டால் எனக்குப் பிடிக்காது!"
"மனிதர்கள் அப்படி என்ன உனக்குச் செய்து விட்டார்கள்?"
"மனிதர்கள் பொல்லாதவர்கள். பொய்யும் புனை சுருட்டுமே அவர்களுக்கு வேலை!"
"எல்லோரையும் சேர்த்து அப்படிச் சொல்லிவிடக் கூடாது. சேந்தன் அமுதன் நல்லவன். இதோவருகிறானே, வைத்தியர் மகன், இவன் ரொம்ப நல்லவன்..."
"நீ எப்படி?"
"நானும் நல்லவன்தான். என் பெருமையை நானே சொல்லிக் கொள்ளக் கூடாது அல்லவா?"
"நீங்கள் இருவரும் எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள்?"
"சக்கரவர்த்திக்கு உடம்பு குணம் இல்லை அல்லவா? அவருடைய நோயைக் குணப்படுத்தச் சிலமூலிகைகள் வேண்டியிருக்கின்றன.இந்தக் காட்டில் அபூர்வ மூலிகைகள் இருக்கின்றனவாமே? அதற்காகத் தான் வைத்தியர் மகனும், நானும் வந்திருக்கிறோம்..."
"சற்று முன் இலங்கைக்குப் போக வேண்டும் என்று சொன்னாயே?"
"இங்கே கிடைக்காத மூலிகைகளைஇலங்கையிலிருந்து கொண்டுவர வேண்டும். இலங்கையில் அனுமார் கொண்டு வந்த சஞ்சீவி பர்வதம் இன்னமும் இருக்கிறதாமே?"
"ஆமாம், இருக்கிறது. அதனாலேதான் அங்கே ஆயிரக் கணக்கான ஜனங்கள் விஷக்காய்ச்சலில் இப்போது செத்துப் போய்க் கொண்டிருக்கிறார்கள்..."
"அதுவும் அப்படியா? எனக்குத் தெரியாதே? எங்களை அனுப்பிய அரண்மனை வைத்தியருக்கும் அது தெரியாது..."
"ஆண்பிள்ளைகளைப் போல் பொய் சொல்லுகிறவர்களை நான் கண்டதேயில்லை. இரண்டு நாளைக்கு முன் இரண்டு பேர் இங்கே வந்தார்கள். அவர்களும் இப்படித்தான் ஏதோ பொய் சொன்னார்கள். ஆனால் அவர்கள் சொன்னது கொஞ்சம் நம்பக் கூடிய பொய்யாக இருந்தது."
"அவர்கள் யார்? என்ன பொய் சொன்னார்கள்?"
"அவர்கள் தங்களை யாரோ மந்திரவாதி அனுப்பியதாகச் சொல்லிக் கொண்டார்கள். சக்கரவர்த்திக்கு ரட்சை கட்டுவதற்காகப் புலி நகமும், யானைவால் ரோமமும் வேண்டும் என்றும், அதற்காக இலங்கை போவதாகவும் சொன்னார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு என் அண்ணன் படகோட்டிக் கொண்டு இலங்கைக்குப் போயிருக்கிறான்..."
"ஓ! "ஓ! அதுவும் அப்படியா?" என்றான் வந்தியத்தேவன். அவனுக்கு ரவிதாசன் என்னும் பயங்கரமந்திரவாதியின் நினைவு வந்தது. இரவில் படுத்திருந்த பாழும் மண்டபத்தில் அடைந்த பயங்கர அநுபவமும் நினைவுக்கு வந்தது.
'கடவுளே! இந்த மாதிரி காரியங்களிலெல்லாம் ஏன் சிக்கிக் கொண்டோம்? போர்க்களத்தில் நேருக்கு நேர் பகைவனுடன் நின்று போர் புரிய வேண்டும்! அப்போது நம் வீரத்தையும், தீரத்தையும் காட்ட வேண்டும்.இந்த மாதிரி தந்திர மந்திர சூழ்ச்சிகளில் எதற்காக அகப்பட்டுக் கொண்டோம்?'
'நமக்கு முன்னாலேயே இலங்கைக்குப் படகில் சென்றிருப்பவர்கள் யாராயிருக்கக் கூடும்! இந்தப் பெண்ணை எவ்வளவு தூரம் நம்பலாம்? இவளும் ஒருவேளை அந்தச் சதிகாரக் கூட்டத்தில் சேர்ந்தவளாயிருக்கக் கூடுமோ!... இராது, இராது! இவள் கள்ளங்கபடம் அற்ற பெண். இவளை எப்படியாவது சிநேகிதம் செய்து வைத்துக் கொள்வது நல்லது.'
"பூங்குழலி! உன்னிடம் உண்மையைச் சொல்லிவிடுகிறேன். சற்று முன் மூலிகை கொண்டு போக நான் வந்திருப்பதாகச் சொன்னேனே, அது பொய்தான்! மிக முக்கியமான இரகசியமான காரியத்துக்காக நான் இலங்கைக்குப் போகிறேன்.அதை உன்னிடம் சொல்ல விரும்புகிறேன்."
"வேண்டாம்! முக்கியமான இரகசியமான காரியங்களைப் பெண்களிடம் சொல்லக்கூடாது என்று உனக்குத் தெரியாதா? என்னிடம் ஒன்றும் சொல்ல வேண்டாம்..."
"சாதாரணப் பெண்களைப்பற்றித்தான் அப்படிச் சொல்லுவார்கள். உன்னிடம் இரகசியத்தைக் கூறினால் அப்படி ஒன்றும் நேர்ந்துவிடாது." "நான் சாதாரணப் பெண் இல்லையென்று உனக்கு எப்படித் தெரிந்தது? என்னை நீ பார்த்து ஒரு நாழிகைகூட ஆகவில்லையே."
"பூங்குழலி! உன்னை அந்தக் கோவிலில் மதிலின்மீது முதன்முதலில் பார்த்த உடனேயே எனக்குப் பிடித்துப் போய்விட்டது. உன்னை ஒன்று கேட்கிறேன். அதற்கு உண்மையாக மறுமொழி சொல்கிறாயா?"
"கேட்டுப் பார்!"
"சேந்தன்அமுதன் உன்னுடைய காதலன் அல்ல என்பது நிஜமா? அவனை நீ மணந்து கொள்ளப் போவதில்லையா?"
"எதற்காகக் கேட்கிறாய்?"
"சேந்தன்அமுதன் என் சிநேகிதன், அவனுக்கு எதிராக ஒன்றும் நான் செய்யக் கூடாது. ஆனால் அவன் உன் காதலன் இல்லையென்றால்..."
"சொல்லு! ஏன் தயங்குகிறாய்!"
"அந்த ஸ்தானத்துக்கு நான் விண்ணப்பம் போடலாம் என்று பார்க்கிறேன். பூங்குழலி! காதலைப்பற்றி நீ குறைவாகப் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை. உலகத்தில் காதலைக் காட்டிலும் தெய்வீகமான சக்தி வேறு ஒன்றும் கிடையாது. அப்பர், சுந்தரர், சம்பந்தர் எல்லோரும் கடவுளைக் காதலனாகக் கொண்டு பாடியிருக்கிறார்கள். தொல்காப்பியரும், வள்ளுவரும், மற்றும் தமிழ்ப் பெரும் புலவர்களும் காதலைப் பற்றிப் பாடியிருக்கிறார்கள். காளிதாஸன் காதலைப் பற்றிப் பாடியிருக்கிறான். பிருந்தாவனத்தில் கண்ணன் கோபியரின் காதலுக்கு வசப்பட்டான்..."
"ஐயா! நான் ஒன்று சொல்கிறேன். அதை நன்றாய்க் கேட்டு மனத்தில் வாங்கிக் கொள்ளும்!"
"அது என்ன?"
"எனக்கும் உம்மைக் கண்டால் பிடித்துத்தான் இருக்கிறது. இரண்டு நாளைக்கு முன் வந்தவர்களைப் பார்த்ததும் உண்டான வெறுப்பு உம்மிடம் உண்டாகவில்லை..."
"ஓ! ஓ! நான் யோகசாலிதான்!"
"ஆனால் காதல், கீதல் என்ற பேச்சை மட்டும் எடுக்க வேண்டாம்!"
"ஏன்? ஏன்?"
"சேந்தன் அமுதன் என் காதலன் இல்லை. ஆனால் எனக்கு வேறு காதலர்கள் இருக்கிறார்கள்..."
"அடடா! அடடா! வேறு காதலர்களா? யார்? எத்தனை பேர்?"
"இரவு நடுநிசியில் நான் வீட்டிலிருந்து எழுந்து செல்வேன். என்னைப் பின்தொடர்ந்து வந்தால் அவர்களை உமக்குக் காட்டுவேன். நீரே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்!" இப்படிச் சொல்லிவிட்டுப் பூங்குழலி 'ஹாஹாஹா' என்று சிரித்தாள்.
அந்தச் சிரிப்பு வந்தியத்தேவனுடைய நெஞ்சை என்னமோ செய்தது. 'பாவம் இந்தப் பெண்ணுக்குச் சித்தப் பிரமை போலும்! நம்முடைய காரியத்துக்கு இவள் மூலமாக எந்தவித உதவியையும் எதிர்பார்ப்பது வீண்! இவளிடம் ஒன்றும் சொல்லாமலிருப்பதே நலம்."
கலங்கரை விளக்கின் அருகிலிருந்த வீட்டை அவர்கள் நெருங்கினார்கள். வீட்டுக்குள்ளிருந்த ஒரு பெரியவரும், வயது முதிர்ந்த ஸ்திரீயும் வௌியே வந்தனர். பூங்குழலியையும், மற்ற இருவரையும், குதிரைகளையும் பார்த்துவிட்டுப் பெரியவர் திகைத்து நின்றார்.
"பூங்குழலி! இவர்கள் யார்? எங்கே இவர்களைப் பிடித்தாய்?" என்று கேட்டார்.
"நான் இவர்களைப் பிடிக்கவில்லை. அப்பா! இவர்கள்தான் என்னைப் பிடித்தார்கள்!" என்றாள் பூங்குழலி.
"எல்லாம் ஒன்றுதான்.'பொழுது போவதற்கு முன்னால் வீட்டுக்கு வந்துவிடு' என்று சொன்னால் நீ கேட்பதில்லை. முந்தாநாள் இரண்டு பேரை அழைத்துக்கொண்டு வந்தாய். இன்றைக்கு இரண்டு பேரை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறாய். இவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள்?"
"சக்கரவர்த்தியின் வைத்தியத்துக்காக மூலிகை கொண்டு போவதற்கு இவர்கள் வந்திருக்கிறார்கள், அப்பா!"
"ஏன் ஐயா, இந்தப் பெண் சொல்லுவது உண்மை தானா?" என்று அந்தப் பெரியவர் வந்தியத்தேவனைப் பார்த்துக் கேட்டார்.
"ஆம், பெரியவரே! இதோ சீட்டு!" என்று சொல்லி, வந்தியத்தேவன் இடையில் கட்டியிருந்த துணிச்சுருளிலிருந்து ஓலை ஒன்றை எடுத்துப் பெரியவரிடம் கொடுத்தான்.
அதே சமயத்தில் இன்னொரு ஓலை தரையில் விழுந்தது. அதை அவசரமாகக் குனிந்து எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டான். "பெரிய மூடன் நான்! ஒரு தடவை காரியம் கெட்டும் புத்தி வரவில்லை!" என்று வாய்க்குள் முணு முணுத்துக் கொண்டான்.
பெரியவர் அந்த ஓலையை வாங்கிக் கொண்டார். கலங்கரை விளக்கின் வௌிச்சத்தில் அதைக் கவனமாகப் பார்த்தார். அவர் முகம் மலர்ந்தது. தமது மனையாளை நோக்கி, "இளைய பிராட்டி ஓலை கொடுத்து அனுப்பியிருக்கிறாள்.இவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும். உள்ளே சென்று உன் மருமகளிடம் சொல்லு! சோற்றுப் பானையைக் கவிழ்த்து உருட்டிவிடப் போகிறாள்!" என்றார்.

பொன்னியின் செல்வன்/இரண்டாம்அத்தியாயம்

சேற்றுப் பள்ளம்
காட்டிலும் மேட்டிலும், கல்லிலும் முள்ளிலும் அந்தப் பெண்ணைத் தொடர்ந்து வந்தியத்தேவன் ஓடினான். ஒருசமயம் அவள் கண்ணுக்குத் தெரிந்தாள். மறு கணத்தில் மறைந்தாள். இனி அவளைப் பிடிக்க முடியாது என்று தோன்றியபோது மறுபடியும் கண்ணுக்குப் புலப்பட்டாள். மாய மாரீசனைத் தொடர்ந்து இராமர் சென்ற கதை வந்தியத்தேவனுக்கு நினைவு வந்தது. ஆனால் இவள் மாயமும் அல்ல; மாரீசனும் அல்ல இவளுடைய கால்களிலே மானின் வேகம் இருக்கிறது என்பது மட்டும் நிச்சயம். அம்மம்மா! என்ன விரைவாக ஓடுகிறாள்? 'எதற்காக இவளைத் தொடர்ந்து ஓடுகிறோம், இது என்ன பைத்தியக்காரத்தனம்?' என்று எண்ணினான். உடனே அதற்கு ஒரு காரணமும் கற்பித்துக் கொண்டான். கோடிக்கரை நெருங்க நெருங்க, சேந்தன் அமுதன் வர்ணித்த மங்கையின் நினைவு அவனுக்கு அடிக்கடி வந்து கொண்டிருந்தது. இவள் அந்தப் பூங்குழலியாகத்தான் இருக்க வேண்டும். இவளுடன் சிநேகம் செய்து கொண்டால் வந்த காரியம் நிறைவேறுவதற்கு அநுகூலமாயிருக்கும். அத்துடன் கலங்கரை விளக்கத்துக்குப் போக வழி கேட்டும் தெரிந்து கொள்ளலாம். தொலைதூரத்தில் வரும்போதே அவர்களுக்குக் கலங்கரை விளக்கின் உச்சி தெரிந்தது. ஆனால் அதை நெருங்குவது எளிதாயில்லை. காட்டுக்குள் புகுந்ததும் கலங்கரை விளக்கு தெரியவேயில்லை. காட்டுக்குள்ளே சுற்றிச் சுற்றி வருவதாக ஏற்பட்டதே தவிர வழி அகப்படவில்லை. இந்தச் சமயத்திலே தான் குழகர் கோயிலின் மதில் சுவரின் மேல் பூங்குழலியை வந்தியத்தேவன் கண்டான். அவளைப் பிடித்து வழி கேட்கலாம் என்று பார்த்தால், அவள் இப்படி மாய மானைப் போல் பிடிபடாமல் ஒடுகிறாளே? இவளை இப்படியே விட்டு விட்டுத் திரும்ப வேண்டியதுதான்? ஆனால் ஓட்டப் பந்தயத்தில் கூட ஒரு பெண்ணுக்குத் தோற்பது என்றால், அதுவும் மனத்துக்கு உகந்ததாயில்லை...
ஆ! அதோ திறந்தவௌி வந்துவிட்டது. சற்றுத் தூரத்தில் நீலக்கடல் தெரிகிறது. விரிந்து பரந்து அமைதி குடிகொண்ட அந்தக் கடலின் தோற்றம் என்ன அழகாயிருக்கிறது! அதோ கலங்கரை விளக்கமும் தெரிகிறது. அதன் உச்சியில் இப்போது ஜோதி கொழுந்துவிட்டு எரிகிறது. அதன் செந்நிறக் கதிர்கள் நாலா பக்கமும் பரவி விழுந்து விசித்திர ஜால வித்தைகள் புரிகின்றன.
இந்த இடத்தில் இந்தப் பெண்ணைப் பின்தொடர்வதை விட்டுவிட்டுக் கலங்கரை விளக்கை நோக்கிப் போகலாமா? கூடாது!கூடாது! இந்தத் திறந்த வௌியில் இவளை ஓடிப் பிடிப்பது சுலபம். இங்கே அவ்வளவு மணலாகக் கூட இல்லை. கால் மணலில் புதையவில்லை. பூமியில் புல் முளைத்துக் கெட்டிப் பட்டிருக்கிறது. சில இடங்களில் சேறு காய்ந்து பொறுக்குப் படர்ந்திருக்கிறது. இங்கேயெல்லாம் தடங்கலின்றி ஓடலாம். அந்தப் பெண்ணை இலகுவாய்ப் பிடித்துவிடலாம்! மேலும் அவள் கடலை நோக்கியல்லவா ஓடுகிறாள்? எவ்வளவு ஓடினாலும் முடிவில் கடலோரத்தில் சென்று அவள் நின்று தானே ஆக வேண்டும்! ஒருவேளை இந்த விந்தையான பெண் கடலிலேயே முழுகி மறைந்து விடுவாளோ! அடடா! குதிரையிலேயே ஏறி வராமற் போனோமே? அப்படி வந்திருந்தால் இந்தத் திறந்த வௌியில் ஒரு நொடியில் இவளைப் பிடித்து விடலாமே?
அதோ அவள் சற்றுத் தயங்கி நிற்கிறாள். நேரே கடலே நோக்கி ஓடாமல் வலதுபக்கமாகத் திரும்பி ஓடுகிறாள்! தன்னிடம் பிடிபடாமல் இருப்பதற்காக வலதுபுறத்தில் சற்றுத் தூரத்தில் தென்பட்ட காட்டை நோக்கி ஓடுகிறாள். காட்டுக்குள் அவள் புகுந்துவிட்டால் நிச்சயமாகப் பிடிக்க முடியாதுதான்! இத்தனை நேரம் ஓடியதும் வீண்! வந்தியத்தேவனுடைய கால்களும் அச்சமயம் கெஞ்ச ஆரம்பித்து விட்டது...
மீண்டும் அவளுடைய மனத்தை மாற்றிக் கொண்டு விட்டாள் போலும்! காட்டுக்குள் போகும் எண்ணத்தை விட்டு விட்டாள் போலும்! பம்பரத்தைப் போல் ஒரு சுற்றுச்சுற்றித் திரும்பி ஓடி வருகிறாள். கலங்கரை விளக்கின் அடிக்குப் போக நினைத்தாள் போலும். ஒரு நாலு பாய்ச்சல் பாய்ந்தால் அவளைப் பிடித்து விடலாம். கைப்பிடியாக அவளைப் பிடித்து "பெண்ணே! ஏன் இப்படி என்னைக் கண்டு மிரண்டு ஓடுகிறாய்? உனக்கு உன் காதலனிடமிருந்து செய்தி கொண்டு வந்திருக்கிறேன்!" என்று சொன்னால், எத்தனை அதிசயம் அடைவாள்! சேந்தன் அமுதன் அவனிடம் ஒன்றும் சொல்லி அனுப்பவில்லை என்பது உண்மைதான். அதனால் என்ன? ஏதாவது சொந்தமாகக் கற்பனை செய்து சொன்னால் போகிறது!...
வந்தியத்தேவன் மனத்திற்குள் தீர்மானித்தபடி தன் தேகத்தில் மிச்சமிருந்த வலிமையையெல்லாம் உபயோகித்துப் பாய்ந்து ஓடினான். திரும்பி ஓடிவந்து கொண்டிருந்த அவளை நாலே பாய்ச்சலில் பிடித்துவிடலாம் என்பதுதான் அவனுடைய உத்தேசம். திடீரென்று "ஐயோ!" என்றான். தனக்கு என்ன நேர்ந்து விட்டது என்பது முதலில் அவனுக்கே தெரியவில்லை. பிறகு புலப்படத் தொடங்கியது. அவனுடைய கால்கள் இரண்டும் சேற்றில் புதைந்து கொண்டிருந்தன. முதலில் பாதங்கள் மட்டும் புதைந்தன. பிறகு கணுக்கால் புதைந்தது, முழங்கால் வரையில் சேறு மேலேறி விட்டது!
அடாடா! இந்த இடம் நம்மை எப்படி ஏமாற்றி விட்டது? மேலே பார்த்தால் நன்றாய்க் காய்ந்து பொறுக்குத் தட்டியிருக்கிறது. உள்ளே சேறு இன்னும் காயவில்லை. என்றுமே முழுமையும் காயமுடியாத புதை சேற்றுக் குழிகளைப் பற்றி வந்தியத்தேவன் கேள்விப்பட்டதுண்டு. ஆடுமாடுகள், குதிரைகள், யானைகள் கூட அப்பள்ளங்களில் அகப்பட்டுக் கொண்டால் சிறிது சிறிதாக உள்ளே அமுங்கிக் கொண்டே போய்க் கடைசியில் முழுதுமே முழுகி மறைந்து விடுமாம்! அத்தகைய புதைகுழிதானோ இது? அப்படித் தான் தோன்றுகிறது. முழங்காலும் மறைந்து விட்டதே! மேலும் உள்ளே இறங்கிக் கொண்டேயிருப்போமோ? விரைவில் தொடை வரைக்கும் புதைந்து விடும் போலிருக்கிறதே! யானைகளையும் குதிரைகளையும் விழுங்கி ஏப்பம் விடும் புதை சேறு நம்மைச் சும்மா விட்டு விடுமா! ஐயோ! இதுவா நமது முடிவு? நாம் கண்ட எத்தனை எத்தனையோ பகற் கனவுகள் எல்லாம் இதிலேயே புதைந்து விட வேண்டியதுதானா? இந்த அபாய வேளையில் அந்த விசித்திரமான பெண் வந்து கை கொடுத்துக் காப்பாற்றினால்தான் உண்டு.தப்புதவதற்கு வேறு வழியில்லை.ஒரு பெருங்கூச்சல் போட்டுப் பார்க்கலாம். இவ்விதம் எண்ணிய வந்தியதேவன், 'ஐயோ! நான் செத்தேன்! சேற்றில் முழுகிச் சாகிறேன். எனக்குக் கைகொடுத்து உதவி செய்து காப்பாற்றுவார் யாரும் இல்லையா?" என்று கத்தினான்.
அந்தக் கூக்குரல் பூங்குழலியின் காதில் விழுந்தது. அவனுக்கு நேர் எதிரே சற்றுத் தூரத்தில் ஓடிக் கொண்டிருந்த பூங்குழலி நின்றாள். ஒரு கணம் தயங்கினாள். வந்தியத்தேவனுடைய அபாயமான நிலையைப் பார்த்துத் தெரிந்து கொண்டாள்.
மறுகணம் அங்கே பாதி மணலிலும் பாதி சேற்றுக் குழியிலும் கிடந்த படகு ஒன்று அவள் கவனத்தைக் கவர்ந்தது. அக்குழியில் தண்ணீர் நிறைந்து ஆழமான நீரோடையாக இருந்த காலத்தில் அப்படகு உபயோகப்பட்டிருக்க வேண்டும். அதில் இப்போது லாகவமாகக் குதித்து ஏறினாள். துடுப்பை எடுத்து இரண்டு தடவை வலித்தாள். அடாடா! இது என்ன அதிசயம்? அந்தப் படகு நீரில் அன்னப்பறவை செல்வது போல் அல்லவா சேற்றின் மேலே விரைவாக மிதந்து செல்கிறது? மிதந்து சென்று புதை சேற்றுக் குழியின் அக்கரையையும் அடைந்துவிட்டது. பூங்குழலி கெட்டித்தரையில் குதித்தாள். கரையில் கால்களை நன்றாய் ஊன்றிக் கொண்டு வந்தியத் தேவனுடைய கைகளைப் பற்றிக் கரையில் இழுத்து விட்டாள். அம்மம்மா! அந்த மெல்லியலாளின் கைகளிலே தான் எவ்வளவு வலிமை! தஞ்சைபுரிக்கோட்டைத் தளபதி சின்னப் பழுவேட்டரையருடைய இரும்புக் கைகளைவிட இவளுடைய கரங்கள் அதிக உறுதியாயிருக்கின்றனவே!
கரை ஏறியதும் வந்தியத் தேவன் கலகலவென்று சிரித்தான். அவனுடைய கால்கள் மட்டும் கொஞ்சம் நடுங்கிக் கொண்டிருந்தன.
"என்னைக் காப்பாற்றிக் கரைசேர்த்து விட்டதாக உனக்கு எண்ணம் போலிருக்கிறது! நீ வந்திராவிட்டால் நான் கரையேறி இருக்க மாட்டேன் என்று நினைத்தாயோ?" என்றான்.
"பின் எதற்காக அப்படி 'ஐயோ! ஐயோ!' என்று கத்தினாய்?" என்று பூங்குழலி கேட்டாள்.
"உன்னை ஓடாமல் தடுத்து நிறுத்துவதற்காகத் தான்!"
"அப்படியானால் மறுபடியும் உன்னைக் குழியிலேயே தள்ளி விடுகிறேன். உன் சாமர்த்தியத்தினால் நீயே கரை ஏறிக்கொள்!" என்று பூங்குழலி சொல்லித் தள்ள யத்தனித்தாள்.
"ஐயையோ!" என்று வந்தியத்தேவன் விலகி நின்று கொண்டான்.
"எதற்காக அலறுகிறாய்?"
"உயிருக்காகப் பயப்படவில்லை; சேற்றுக்குத்தான் பயப்படுகிறேன்! ஏற்கெனவே தொடை வரைக்கும் சேறாகிவிட்டது!"
பூங்குழலியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. வந்தியத்தேவனை ஏற இறங்கப் பார்த்தாள்.
"அதோ கடல் இருக்கிறது! போய் சேற்றை அலம்பிச் சுத்தம் செய்துகொள்!" என்றாள்.
"நீ கொஞ்சம் முன்னால் சென்று வழிகாட்ட வேண்டும்!" என்றான் வந்தியத்தேவன். இருவரும் கடற்கரையை நோக்கி நடந்தார்கள் சேற்றுப் பள்ளத்தைச் சுற்றிக் கொண்டு சென்றார்கள்.
"என்னைக் கண்டதும் எதற்காக அப்படி விழுந்தடித்து ஓடினாய்? என்னைப் பயங்கரப் பேய் பிசாசு என்று எண்ணி விட்டாயா?" என்று வல்லவரையன் கேட்டான்.
"இல்லை; பேய்பிசாசு என்று எண்ணவில்லை. ஆந்தை என்று எண்ணினேன். உன் மூஞ்சி ஆந்தை மூஞ்சி மாதிரியே இருக்கிறது!" என்று கூறிவிட்டுச் சிரித்தாள்.
வந்தியத்தேவனுக்குத் தன் தோற்றத்தைக் குறித்துக் கர்வம் அதிகம். ஆகையால் அவனை ஆந்தை மூஞ்சி என்று சொன்னது அவனுக்கு மிக்க கோபத்தை உண்டாக்கிற்று.
"உன்னுடைய குரங்கு முகத்துக்கு என்னுடைய ஆந்தை முகம் குறைந்து போய்விட்டதாக்கும்!" என்று முணு முணுத்தான்.
"என்ன சொன்னாய்?"
"ஒன்றுமில்லை. என்னைக் கண்டு எதற்காக அப்படி ஓடினாய் என்று கேட்டேன்."
"நீ எதற்காக அப்படி என்னைத் துரத்தித் கொண்டு வந்தாய்?" "கலங்கரை விளக்கத்துக்கு வழி கேட்பதற்காக உன்னைத் துரத்திக் கொண்டு வந்தேன்..."
"அதோ தெரிகிறதே விளக்கு! என்னை வழி கேட்பானேன்?"
"காட்டுக்குள் புகுந்த பிறகு தெரியவில்லை. அதனாலே தான்! நீ எதற்காக என்னைக் கண்டதும் அப்படி ஓட்டம் எடுத்தாய்?"
"ஆண் பிள்ளைகள் மிகப் பொல்லாதவர்கள். ஆண் பிள்ளைகளைக் கண்டாலே எனக்குப் பிடிப்பத்திலை!"
"சேந்தன் அமுதனைக்கூடவா?" என்றான் வல்லவரையன் கொஞ்சம் மெல்லிய குரலில்.
"யாரைச் சொன்னாய்?"
"தஞ்சாவூர் சேந்தன் அமுதனைச் சொன்னேன்."
"அவனைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?"
"அவன் உன் அருமைக் காதலன் என்று தெரியும்." "என்ன? என்ன?"
உன் பெயர் பூங்குழலி தானே?"
"என் பெயர் பூங்குழலிதான். சேந்தன் அமுதனைப் பற்றி என்ன சொன்னாய்? அவன் என்..."
"அவன் உன் காதலன் என்றேன்."
பூங்குழலி கலீர் என்று நகைத்தாள். "அப்படி யார் உனக்குச் சொன்னது?" என்றாள்.
"வேறு யார் சொல்வார்கள்? சேந்தன் அமுதன் தான் சொன்னான்".
"தஞ்சாவூர் வெகு தூரத்தில் இருக்கிறது. அதனாலே தான் அப்படிச் சொல்லித்தப்பித்துக் கொண்டான்!"
"இல்லாவிட்டால்...?"
"இங்கே என் முன்னால் சொல்லியிருந்தால் அந்தச் சேற்றுக் குழியில் தூக்கிப் போட்டிருப்பேன்."
"அதனால் என்ன? சேற்றை அலம்பிக்கொள்ளக் கடலில் ஏராளமாய்த் தண்ணீர் இருக்கிறதே!"
"நீ விழுந்த புதை சேற்றுக்குழியில் மாடு, குதிரை எல்லாம் முழுகிச் செத்திருக்கின்றன. யானையைக் கூட அது விழுங்கி விடும்!"
வந்தியத்தேவனுடைய உடம்பு சிலிர்த்தது. அவனை அந்தப் படுகுழி கொஞ்சமாகக் கீழே இழுத்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட உணர்ச்சியை நினைத்துக் கொண்டான். இவள் மட்டும் வந்து கரையேற்றியிராவிட்டால், இத்தனை நேரம்... அதை நினைத்தபோது அவன் உடம்பெல்லாம் நடுங்கிற்று.
"சேந்தன் அமுதன் என்னைப்பற்றி இன்னும் என்ன சொன்னான்?" என்று பூங்குழலி கேட்டாள்.
" நீ அவனுடைய மாமன் மகள் என்று சொன்னான். உன்னைப் போன்ற அழகி தேவலோகத்திலே கூடக் கிடையாது என்று சொன்னான்..."
"தேவலோகத்துக்கு அவன் நேரிலே போய்ப் பார்த்திருப்பான் போலிருக்கிறது இன்னும்?..."
"நீ நன்றாகப் பாடுவாய் என்று சொன்னான். நீ பாடினால் கடலுங்கூட இரைச்சல் போடுவதை நிறுத்தி விட்டுப்பாட்டைக் கேட்குமாம்! அது உண்மைதானா?"
"நீயே அதைத் தெரிந்துகொள்! இதோ! கடலும் வந்து விட்டது!..." இருவரும் கடற்கரை யோரமாக வந்து நின்றார்கள்.